பார்சல் சாப்பாட்டில் எலி தலை விவகாரம்: ஆரணி ஓட்டலுக்கு சென்ற அதிகாரிகளை மிரளச் செய்த எலிக் கூட்டம்1416804726


பார்சல் சாப்பாட்டில் எலி தலை விவகாரம்: ஆரணி ஓட்டலுக்கு சென்ற அதிகாரிகளை மிரளச் செய்த எலிக் கூட்டம்


ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் காந்தி நகரை சேர்ந்தவர் முரளி(45). இவர் தனது வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்களுக்காக, ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள சைவ ஓட்டலில் 2 நாட்களாக பார்சல் சாப்பாடு வாங்கி சென்றுள்ளார். நேற்று முன்தினம், அந்த ஓட்டலில் மீண்டும் 35 சாப்பாடு ஆர்டர் செய்து, வீட்டிற்கு பார்சல் வாங்கி சென்று, உறவினர்களுக்கு பரிமாறினர். அப்போது, சாப்பாடுடன் வாங்கி சென்ற பீட்ரூட்  பொரியலில் எலியின் தலை இருந்தது. அதிர்ச்சியடைந்த முரளி மற்றும் அவரது உறவினர்கள், பீட்ரூட் பொரியலில் இருந்த எலி தலையை பார்சல் கட்டிக்கொண்டு, ஓட்டலுக்கு வந்து காண்பித்தனர். அப்போது, ஓட்டல் உரிமையாளர் சாப்பாட்டில் எலியின் தலை இருக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முரளி மற்றும் உறவினர்கள் ஓட்டலை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முரளி, இதுகுறித்து  மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஓட்டலில் வாங்கி சென்ற பார்சல் சாப்பாட்டில் எலி தலை இருந்த சம்பவம் ஆரணி பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்  ராமகிருஷ்ணன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவபாலன், சேகர் ஆகியோர் நேற்று சம்பந்தப்பட்ட ஓட்டலில் சோதனை செய்தனர். அப்போது, ஓட்டலில் எலிகள் அங்கும் இங்கும் ஓடியதாக கூறப்படுகிறது. இதை கண்டு அதிகாரிகள் மிரண்டனர். பின்னர், ஓட்டலை முறையாக பராமரிக்காததால் நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனர்.

Comments

Popular posts from this blog