Jadeja: ‘ஆமா, மனக்கசப்பு இருக்கு’…ஜடேஜா இப்போ எப்டி இருக்காருனு தெரியுமா? ஜடேஜா நண்பர் பேட்டி!
Jadeja: ‘ஆமா, மனக்கசப்பு இருக்கு’…ஜடேஜா இப்போ எப்டி இருக்காருனு தெரியுமா? ஜடேஜா நண்பர் பேட்டி!
இந்த சீசன் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சிஎஸ்கே கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட ரவீந்திர ஜடேஜா முதல் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக்கொடுத்தார். அதுமட்டுமல்ல பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலுமே படுமோசமாக சொதப்பி பார்ம் அவுட்டிற்கு சென்றார்.
ஜடேஜா விலகல்:
ஜடேஜா தொடர்ந்து கேப்டன் பதவியில் நீடித்தால், அவரது நிலைமை இன்னும் மோசமாகும் எனக் கருதப்பட்ட நிலையில் அவர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். மீண்டும் தோனி வசம் கேப்டன் பதவி சென்றது. தோனி தலைமையில் சிஎஸ்கே முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று அசத்தியது. அந்த ஒரு தோல்வி கூட 12 ரன்கள் வித்தியாசத்தில்தான். இதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்க சிஎஸ்கே படுதோல்வியை சந்தித்து, பிளே ஆஃப் ரேசில் இருந்து வெளியேறியுள்ளது.
ஜடேஜாவுக்கு காயம்:
இந்நிலையில், ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்தது. ஜடேஜா ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவில்லை.
இவரது காயம் பாதிதான் சரியாகியுள்ளதாகவும், இந்த காயத்தோடு அடுத்த போட்டியில் பங்கேற்றால், அது ஜடேஜாவுக்கு பெரிய பிரச்சினையாக மாறும் என சிஎஸ்கே மருத்துவர்கள் எச்சரித்ததால்தான் ஜடேஜா விலகியிருப்பதாக முன்பு தகவல் வெளியாகியிருந்தது.
ஜடேஜா vs நிர்வாகம்?
இந்நிலையில் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதால்தான் ஜடேஜா அதிருப்தியடைந்து எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக புது தகவல் வெளியாகியிருந்தது. அதன்பிறகு ஜடேஜாவும் இந்த விவகாரத் குறித்துப் பேசவில்லை.
ஜடேஜா நண்பர் பேட்டி:
இந்நிலையில் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தற்போது பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், ‘‘உண்மையில் தற்போது ஜடேஜா மன வருத்தத்திலும், மன வேதனையுடன்தான் இருக்கிறார். கேப்டன்ஸி விவகாரத்தில் ஜடேஜாவை நிர்வாகம் சரியாக கையாண்டிருக்க வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் ஜடேஜாவுக்கு மட்டுமல்ல, வேறு எந்த வீரருக்கு நடந்திருந்தாலும், வலியைத்தான் தந்திருக்கும். ஜடேஜா சிஎஸ்கேவில் நீடிப்பாரா, இல்லையா என்பது குறித்து எனக்கு தெரியாது. அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பது உண்மைதான்’’ எனக் கூறினார்.
இதன்மூலம், கேப்டன் பதவியை பறித்ததால் தான் ஜடேஜா வெளியேறினார் என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். மேலும், ஜடேஜா அடுத்த சீசனில் சிஎஸ்கேவுக்கு விளையாடுவதும் சந்தேகம்தான் எனக் கூறப்படுகிறது.
Comments
Post a Comment