தந்தை வாங்கிய கடனுக்கு 10ஆம் வகுப்பு மாணவன் கொலை திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்!


தந்தை வாங்கிய கடனுக்கு 10ஆம் வகுப்பு மாணவன் கொலை திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்!


திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது 15 வயது மகன் கிருஷ்ணன், அந்தபகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அருகில் உள்ள செட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவரிடம் ராமலிங்கம் கடன் பெற்றதாக கூறப்படுகின்றது. இதுதொடர்பாக இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் ராமலிங்கத்தின் இருசக்கர வாகனத்தை வெள்ளையம்மாள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

கடந்த மார்ச் 21 ம் தேதி இருசக்கர வாகனத்தை கேட்கச் சென்ற ராமலிங்கத்தின் மகனை வெள்ளையம்மாள் உடன் இருந்த அவரது ஆண் நண்பர் பச்சமுத்து என்பவர் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்து திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவன் கிருஷ்ணன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ஏற்கனவே பச்சமுத்துவை கைது செய்தனர். ஆனால் இதுவரை வெள்ளையம்மாள் கைது செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் சம்மந்தப்பட்ட பெண் குற்றவாளியை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி கஞ்சநாயக்கன்பட்டியில் துவரங்குறிச்சி - செந்துறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது குற்றவாளியை கைது செய்யக்கோரியும் முறையான நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். தகவலறிந்த மருங்காபுரி வருவாய்த்துறையினர் மற்றும் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் மாணவர்கள் பெண் குற்றவாளியை கைது செய்யாதவரை நாங்கள் மறியல் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்கிடையே துவரங்குறிச்சி போலீசார் வெள்ளையம்மாளை தேடிச்சென்றிருந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூரில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்தனர்.

 

பின்னர் வெள்ளையம்மாள் கைது செய்யப்பட்ட தகவல் மறியலில் ஈடுபட்டிருந்த மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட வெள்ளையம்மாளை வீடியோ காலில் போலீசார் காட்டியதால் சமாதானமடைந்த மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சக மாணவனை கொலை செய்த குற்றவாளியை கைது செய்யக்கோரி பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 4 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments

Popular posts from this blog